வேலூர்: “நாட்டின் உயர் கல்வியை அதிகரிக்க, 15 புதிய மத்திய பல்கலைக் கழகங்களைத் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,” என மத்திய அமைச்சர் வாசன் கூறியுள்ளார்.வேலூர் வி.ஐ.டி., பல்கலை துவங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடந்தன.பல்கலை வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். தமிழக காங்., தலைவர் தங்கபாலு, ருவாண்டா குடியரசின் இந்திய தூதர் கயாம்ப நயம்வஷா, அந்நாட்டு கல்வி அமைச்சர் சார்லஸ் மிரகண்டே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வெள்ளி விழா தூணை மத்திய அமைச்சர் வாசன் திறந்து வைத்தார்.
விழாவில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வதாக இருந்தது. முக்கிய அலுவல் காரணமாக அவர் வரவில்லை. எனவே, அவரது உரையை வாசன் வாசித்தார்.கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் 180 மாணவர்களுடன் துவங்கிய இந்த கல்லூரி இப்போது, இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் மாணவர்கள், 49 முதுகலை பாடங்களுடன் கூடிய பல்கலையாக உயர்ந்துள்ளது. வேந்தர் விசுவநாதனுடன் பார்லிமென்ட் நாட்களிலேயே பழகும் வாய்ப்பு இருந்தது. இப்போது அவர், உயர்கல்வி வழங்குவது மற்றும் கிராமப்புறங்களை மேம்படுத்துவதை தனது குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.வி.ஐ.டி., உயர்கல்வி வழங்குவதில் சிறந்து வருகிறது.வல்லரசான அமெரிக்கா, சீனாவில் இருந்து ஆண்டுக்கு 25 லட்சம் பட்டதாரிகள் வெளியேறுகின்றனர். இந்த எண்ணிக்கை இந்தியாவில் வெறும் 10 சதவீதம் தான்.நாட்டின் உயர் கல்வியை அதிகரிக்க வேண்டிய புதிய திட்டங்களை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனடிப்படையில் இப்போது 15 புதிய மத்திய பல்கலைக் கழகங்களைத் துவங்க திட்டமிட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் ஆறு புதிய ஐ.ஐ.டி.,க்களைத் துவங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது உரையில் தெரிவித்துள்ளார்.இவ்வாறு வாசன் பேசினார் .
Wednesday 02 Dec 2009 | admin | others