வேலூர்: கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டுத் துறைக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்று வேலூரில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
வேலூர் சத்துவாச்சாரியில், சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.1.10 கோடியில் கட்டப்பட்ட உள் விளையாட்டரங்கை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:
வேலூர் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்ற எம்எல்ஏ ஞானசேகரன், மக்களின் எண்ணம் அறிந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். அவர் இந்த தொகுதிக்கு மட்டுமல்லாமல், மாநில அளவில் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பவர்.
சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வெல்லும் நம் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாகவும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.18 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேபோல் ஓய்வூதியத்தையும் உயர்த்தியுள்ளது.
மருத்துவ செலவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இணக்கத்தினால் சிறப்பாக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியை சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றன. அதில், விளையாட்டுத் துறைக்கு அதிகளவில் முக்கியத்துவம் தரவேண்டும். இதனை பயன்படுத்தி இளைஞர்கள் முன்னேற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் சி. ஞானசேகரன் தலைமை தாங்கினார்.ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன் முன்னிலை வகித்தார். நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் எஸ். பாலசுப்பிரமணியன் வரவேற்றார். சத்துவாச்சாரி நகர்மன்றத் தலைவர் ஆர்.பி. ஜெயலட்சுமி ஏழுமலை, ஒன்றியக் குழுத் தலைவர் கே.தேவேந்திரன், வட்டார கல்விக் குழுத் தலைவர் ஆர்.பி. ஏழுமலை, விளையாட்டு அலுவலர்கள் கே. மதிமாறன், எச்.பீட்டர்சந்திரன் ராஜபாண்டியன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் க. தியாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். செயல் அலுவலர் ஆர். சண்முகம் நன்றி கூறினார்.
காங்கிரஸ் கட்சி வரவேற்பு
வேலூருக்கு வருகை தந்த வாசனுக்கு மாவட்ட எல்லையில், கட்சி மாவட்டத் தலைவர்கள் ஏ.எம். முனிரத்தினம், பாலூர் சம்பத், மாமன்ற உறுப்பினர்கள் சீனிவாசகாந்தி, பி.பி. ஜெயப்பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல், மாவட்ட செயலர்கள் ஆர்.ஜே. மூர்த்தி, திருமால்ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சத்துவாச்சாரியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.எஸ்.பழனி தலைமையில் இசை வாத்தியங்கள், கரகாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சத்துவாச்சாரியிலும், கஸ்பாவிலும் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்ப்பை வாசன் தொடங்கி வைத்தார். காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கொடியேற்றி வைத்தார்.
Sunday 29 Nov 2009 | admin | vellore